Pages

Sunday 3 January 2021

கறுவாச்சி காவியம்

 

என் ஊரு கல்லுப்பட்டி...என் பேரு அழகம்மாள்..எனக்கும் என் பேருக்கும் சம்மந்தமே இருக்காது...அதனாலேயே என்னை செல்லமா எல்லாரும் கறுவாச்சி என்று கூப்பிடுவாங்க...அப்போ எல்லாம் அந்த பேர கேட்டாலே எனக்கு பிடிக்காது..ஆனா இன்னைக்கு அவன் வாயில இருந்து என்னை கறுவாச்சி என்று கூப்பிட மாட்டானா என மனசு தவித்துக்கொண்டு மதுர ஜெயில் வாசல்ல நின்னுட்டு இருக்கேன்...அவனுக்காக..என்னோட ராசாவுக்காக...
 
7 வருஷத்துக்கு முன்னாடி கோவில் திருவிழாவுல அவனை பார்த்தேன்....அதுவும் ஒரு சண்டைல வச்சு...மூக்கு முட்ட குடிச்சிட்டு லுங்கியை ஏத்தி கட்டிய படி ஊர் பெரியவங்களோட சண்டை போட்டுட்டு இருந்தான்...என் அப்பா தான் ஊர் தலைவர்...என் அப்பான்னா எனக்கு உசிரு...அவருக்கு ஏதும்னா என்னால தாங்க முடியாது...அவன் என் அப்பாவை அடிக்க கை ஓங்கும் போது குறுக்கே தடுக்க சென்ற எனக்கு விழுந்தது அந்த அறை...காது ஜவ்வே அதிர்ந்து போச்சு ஒரு நிமிஷம்...அப்பிடி ஒரு அடி...என் பொண்ணு மேலேயே கை வச்சுட்டியா என அப்பாவுக்கும் அவனுக்கும் அன்றைக்கு இருந்தே பகை தொடங்கி விட்டது...
 
அதற்கு பிறகு வயலுக்கு போகும் போது காட்டிலயும் மேட்டிலையும் குடிச்சிட்டு விழுந்து கிடப்பதை பார்த்திருக்கேன்...எப்பவுமே கையில ஒரு பாட்டில் இருக்கும்..இன்னொரு கைல பீடி...வாயில கெட்ட வார்த்தை...சண்டைக்கு இலக்கணம்னா அவன் தான்...ஆனாலும் அவன்கிட்ட ஒரு தைரியம் இருந்திச்சு...அது எனக்கு பிடிச்சிருந்திச்சு...அப்பிடி இருக்கையில் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போகும் போது ஒரு நாள் மாந்தோப்பில் கீழே விழுந்து கிடந்தான்...தூரத்தில் வைத்தே கண்டு பிடிச்சிட்டேன் அது அவன் தான் என்று..என்ன என்று கிட்ட போய் பார்த்தால் யாரோ அவனை நல்லா அடித்து தூக்கி வீசிவிட்டு போன மாதிரி இருந்தது..முகம் முழுக்க காயம்...அரை போதை வேறு..
 
பக்கத்துல போக பயமா இருந்திச்சு..இருந்தாலும் தனியா விட்டுட்டு போக மனசில்ல..உடனே அப்பாவுக்கு கொண்டு போன மோரை எடுத்து அவன் வாயில ஊத்தினேன்..இருமி கொண்டே எழும்பி என்னை உற்று பார்த்தான்...நெத்தி முழுதும் ரத்தம்..என் தாவணி முந்தானையை கிழித்து தலையில் ரத்தம் நிக்குற மாதிரி கட்டினேன்..அவன் மறுபேச்சு பேசவில்லை...இத்தனை நாள் அவனிடம் பார்த்த கோவம் என்னருகில் இல்லை...அனுமதி கூட கேக்காமல் அப்பாவுக்கு கொண்டு போன பழைய சோற்றை திறந்து அவனே சாப்பிட தொடங்கினான்...நான் திரும்ப பேசினா அடி விழுமோ என்ற பயத்தில் வச்ச கண்ணு வாங்காம அவனையே பார்த்து கொண்டிருந்தேன்...முகத்தில் ஒரு அமைதி..ஒரு சாந்தம் தெரிந்தது..இப்பிடியே எப்பவும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என மனசுக்குள் நினைக்கையில்..
 
"அன்னைக்கு போதையில உன்ன அடிச்சுட்டேன்...மன்னிச்சிரு...என்ன இருந்தாலும் ஒரு பொட்ட புள்ளய கை நீட்டி அடிச்சிருக்க கூடாது....கறுவாச்சினாலும் நீ என்னமோ நல்ல பொண்ணு தான்..உங்கப்பன் தான் சரியில்லை..என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருக்கவும்..எனக்கு கோவம் வந்து "நான் ஒன்னும் கறுவாச்சி இல்லை..எனக்கு பேரு இருக்கு..அப்புறம் எங்கப்பாவை பத்தி தப்பா பேசினா அவ்வளவு தான் பாத்துக்கோ.."என சொல்லிவிட்டு அவன் வீட்டுக்கு ஓடி செல்லவும்..
"இந்தா கறுவாச்சி..உன் பேர சொன்னா கருவாச்சினு கூப்பிட மாட்டோம்ல...நாளைக்கும் பழையசோறு கொண்டு வா...நல்லா தான் இருக்கு.."என வேணும் என்றே என்னை சீண்டவும் நானும் கேட்காதது போல் ஓடி விட்டேன்...
 
மறுநாளும் மாந்தோட்டம் வழியே நடந்து வரும் போது அவனை என்னோட கண்ணு தேடிச்சு...வழமையாக அப்பாவுக்கு மட்டும் சாப்பாடு கொண்டு போகும் நான் இன்னைக்கு அவனுக்கும் சேர்த்தே எடுத்து வந்தேன்..ஆனா அவனை காணவில்லை...நேத்து அவன் விழுந்து கிடந்த அதே இடத்துல சாப்பாட்டை வச்சிட்டு வயலுக்கு போய்ட்டேன்..கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்தாலும் "அவன் கிடக்குறான்..ரவுடிப்பய" என மனதில் திட்டி கொண்டே இருட்டியதும் வீட்டுக்கு கிளம்பினேன்...
 
இன்னும் நான் வச்ச சாப்பாடு அதிலே இருந்திச்சு..."இவனுக்கு போய் கொண்டு வந்தேன் பாரு..என் புத்திய எதால அடிக்கணும்னு தெரில...குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க.." என திட்டிக்கொண்டே சாப்பாட்டு பெட்டியை தூக்கினேன்..ஆனால் கனம் குறைந்து இருந்தது...பெட்டியை திறந்தால் நேத்து நான் அவன் தலையில் கட்டி விட்ட என் தாவணி முந்தானை துணி...சுற்றும் முற்றும் தேடினேன்..காணவில்லை..என் அருகே இருந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்றவன்.."ஏ...புள்ள ஊருக்கு தான் நான் குடிகாரன்..உனக்கில்லை புரிஞ்சிதா?" என அவன் சொல்லவும் "அப்பிடின்னா?" என புரியாமல் நான் கேட்க
"இஞ்ச பாரு கறுவாச்சி...இந்த ஊருல எவனுக்கும் என்னையும் பிடிக்காது எனக்கும் எவனையும் பிடிக்காது...என்னை மனுசனா மதிச்சு முதல் முதல்ல சோறு போட்ட பொட்ட புள்ள நீ தான்..இன்னைக்கு மட்டுமில்ல என்னைக்கும் உன்கையாலே இதே பழைய சோறு சாப்பிடணும் புள்ள..."என முதல் முதலாக அவனது பணிவான குரலை கேட்டேன்...
 
எனக்கும் அவன் மேல ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை தான்..என்ன தான் மத்தவங்களோட இவன் சண்டை போட்டாலும் என்னோட மட்டுமே இவனோட உண்மையான குணம் வெளிய தெரிஞ்சிச்சு...அதை எப்பவுமே பார்த்திட்டு இருக்கணும்னு தோணிச்சு..அதுக்கு நான் அவன் கூட இருக்கணும்னு தோணிச்சு....மெல்லமா தலையசைத்து விட்டு..சிரிப்பு சத்தத்தோடு வீட்டுக்கு ஓட்டம் பிடித்தவள் தான்..அன்று முழுக்க அவன் நினைப்பே..எங்கே பார்த்தாலும் அவனே..
 
சண்டைகாரன் இனி என் சொந்தக்காரன் என கவிதை கிறுக்கல்கள் எல்லாம் எழுத தொடங்கினேன்...அதற்கு பிறகு என்ன... மாந்தோட்டம் தான் எங்கள் சந்திப்பு மையம்...மாந்தோட்டம்,பழைய சோறு, குடிப்பதற்கு மோர், நானும் ,என்னோட ராசாவும்...இதுவே எங்களுக்கு போதுமாக இருந்தது இந்த வாழ்நாள் முழுதும்...மத்தவங்க பார்க்காத அவனோட எல்லா முகத்தையும் எனக்கு காட்டினான்...ஒரு குழந்தை போலவே மாறிவிட்டான் என்னோடு இருக்கையில்..நானும் எத்தனை குழந்தை பெற்றாலும் நீ தான் என் முதல் குழந்தை என அவன் தலையை வருடி சொல்லாத நாட்களே இல்லை....
 
இப்பிடியே போன எங்க காதல் நாட்களில் இடி விழுந்தது அப்பா ரூபத்தில்...பஞ்சாயத்து கூடி விட...அவனை ஊரை விட்டு தள்ளி வைக்க வேணும் என எல்லோர் முன்னிலையிலும் அப்பா தீர்ப்பு சொன்னார்...யாரால் ரவுடித்தனத்தை எல்லாம் மறந்து குழந்தையாக மாறினானோ அதே என்னால் மீன்றும் அவன் மிருகதனமாக மாறி விட்டான்..என்னை பிரிந்து கொஞ்சம் கூட இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்தவன்.. குடித்து விட்டு..அப்பா இருந்தா தானே என்னோட கருவாச்சி எனக்கு கிடைக்க மாட்டா... அவ கிடைக்கணும்னா எது வேணும்னாலும் பண்ணுவேன் என தப்பு கணக்கு போட்டவன் அவர் தனியா நடந்து வரும் வேளையில் அருவாள் எடுத்து கண்ட படி வெட்டி சாய்த்து விட்டான்...
 
அவன் கோபத்தையும் பிறவி குணத்தையும் பிழை சொல்வதா..இல்லை ஆசை காட்டி மோசம் செய்த என் காதலை சொல்வதா?நான் உயிருக்குராக நேசித்தவர் இருவர்..ஒன்று என்னோட அப்பா..அவர் இன்று உசிரோடு இல்லை...அவரை கொன்றது என்னோட உயிரின் சரி பாதி என நினைத்த என்னோட ராசா...அதுவும் எனக்காக...இழந்ததை நினைத்து வருத்தம் தான்..ஆனால் இருப்பதையும் இழக்க நான் விரும்பவில்லை..எனக்காக 7 வருட வாழ்க்கையை தொலைத்தவனுக்கு இனி என்னால் மட்டும் தான் சந்தோஷத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...
 
காத்திருப்புக்கு விடை கிடைத்தது...வெளிய தலையை நீட்டி கண்களை கூசி பார்த்த படியே வெளியே வந்தான்..அருகில் ஆசையாக "ராசா எப்பிடி இருக்க" என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்டேன்...அதற்கு அவன் சொன்னது தான் கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்காத பதில் "யாரூ புள்ள நீ?எங்க என்னோட கறுவாச்சி?எங்க என்னோட பழைய சோறு?" என முழுசா குழந்தையா மாறியவனாய் என்னை பார்த்து கேட்டான்...உடனே உள்ளே இருந்த ஆஃபீசர் வந்து "அம்மா இவனுக்கு கொஞ்சம் புத்தி தடுமாறி போச்சு..எப்பவும் கறுவாச்சி கறுவாச்சினே சொல்லிட்டு இருப்பான்..அப்பிடி சொல்லி சொல்லியே இப்பிடி ஆயிட்டான்மா...அவனுக்கு டிரீட்மென்ட் மருந்து எல்லாம் கொடுத்து பாத்தாச்சு..அப்பவும் கறுவாச்சி தான் வேணும்னு சொல்லுறான்..பாத்துகோமா.."என அவனை என்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்...
 
கொஞ்சம் கூட தயங்காமல் அவன் கைகளை என் தோளில் மீது போட்டவளாய் "வா ராசா..நான் தான் உனக்கு மருந்து...குழந்தை போல பாத்துக்குவேன்னு சொல்லி சொல்லி நிஜமாவே உன்ன குழந்தை ஆகிட்டேன்..இனிமேல் உன்னோட அம்மா அப்பா எல்லாமே நான் தான்..இத்தனை காலம் நீ பார்க்காத உலகத்தை காட்டுறேன் வா.."என அவனுக்கு சொல்லி கொண்டே புதிய உலகிற்கு காலடி எடுத்து வைக்கிறேன் என்னோட ராசாவோடு...
 
 
Written By
❤️அம்மு

பெண்ணின் மனதை தொட்டு ❤️

 

 

 
"ரவி உனக்கும் எனக்கும் இனி செட் ஆகாது..என்னை விட்டுரு.." இது தான் சுமா என்னிடம் கடைசியாக சொல்லி விட்டு என்னை பிரிந்து சென்ற அந்த நொடி...
என் கண்ணீரை தவிர வேறு எந்த பதிலையும் அதற்கு நான் சொல்ல முயற்சிக்கவில்லை....ஏனென்றால் அவளை பார்த்த முதல் கணம் தொட்டு அவளை பிரிந்து வாடும் இந்த கணம் வரை அவளை என்னுடைய சிறு அசைவினாலும் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது...
 
ஆனால் அந்த ஒரு எண்ணமே அவள் என்னை வெறுத்து ஒதுக்க காரணம் என்பதை உணர்ந்து கொண்ட தருணத்தில் இருந்து என் இதயம் படும் பாடு எனக்கு தான் தெரியும்...
மூன்று நாளாகியது அவள் என்னோடு பேசாமல் விட்டு..சரி நான் தானே எங்கே போக போகிறாள் என்று அசட்டுத்தனமாக இருந்ததால் மூன்று நாள் முப்பது நாளாகியது...அந்த முப்பது நாட்களில் முன்னூறு மிஸ்ட் கால்ஸ்.. மூவாயிரம் மெசேஜ்..எதற்கும் அவள் மனம் கரையவில்லை..நாட்கள் நகர நகர அவள் என்னவள் என்ற எண்ணம் என்னை விட்டு சற்று தொலைவே செல்ல தொடங்கியது..
 
சரி போதும் இந்த கண்ணாம் பூச்சி ஆட்டம் என்ற முடிவுடன் இன்றைக்கு நேரே அவள் முகத்தை பார்த்து என்னதான் உனக்கு வேணும் என கேட்டுவிடலாம் என்று மெட்ராஸ் பட கார்த்தி ஸ்டைலில் கிளம்பினேன்..
வழமையாக அவளை என் பைக்கின் பின்னால் ஏற்றி கொண்டு நாள் முழுக்க ஊர் சுத்தும் ஆர்வத்துடன் அவள் ஹோஸ்டேல் வாசலில் நிற்பேன்..ஆனால் இன்று முதல் தடவை அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் பதட்டத்துடன் அவள் முகம் பார்க்க தவித்து நிற்கிறேன்...
என்னை பார்த்த உடனே அவள் முகம் எப்படி மாற போகிறதோ..ஏன் இங்கே வந்தாய் என கத்துவாளா ? ஏன் இவவ்ளவு நாள் பார்க்க வரல என திட்டுவாளா?இன்னைக்குன்னு பார்த்து கிளீன் ஷேவ் பண்ணி வந்திருக்கேன்..கோவமா அடிப்பாளா இல்ல செல்லமா கொஞ்சுவாளா? என பல பட்டாம்பூச்சி என் வயிற்றுக்குள்...
 
அதோ வந்துவிட்டாள் சுமா..போன வருஷம் நான் அவள் பிறந்தநாளுக்கு வாங்கி கொடுத்த அதே மஞ்சள் சுடிதார்...முதலில் எனக்கு இது பிடிக்கல என கோவித்து கொண்டாலும் அவள் அதிகம் விரும்பி போடும் சுடிதாரில் இதுவும் இதுவும் ஒன்றானது....
 
அந்த மஞ்சள் சுடிதார் ஒன்றே போதும் என் ரெட் சிக்கல் போட்டு இருந்த என் காதலுக்கு பச்சை கொடி காட்டியது போல ஒரு உணர்வ..அவள் என்னை பார்க்கவில்லை..அருகில் போய் surprise கொடுப்போம் என உற்சாகத்துடன் விரைந்தேன்..ஆனால் அவளில் ஒரு மாற்றம்..அவள் முகத்தை துப்பட்டாவால் மறைத்து இருந்தாள்..ஒரு வேளை இவளும் கொரொனாவிற்கு பயந்து இந்த வேஷம் போட்டிருக்கிறாளோ என மனதில் சிரித்துக் கொண்டு வேகமாக அருகில் சென்றேன்..திடீரென அடித்த காற்றில் அவள் துப்பட்டா விலகியது..
இத்தனை நாள் பார்க்க துடித்த முகத்தை பார்க்கும் ஆவலுடன் சற்று உன்னிப்பாகவே அவள் முகத்தை பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி..
என் அழகு தேவதையின் முகம் ஒரு பாதி கருகிய நிலையில் இருந்தது..எனக்கு ஒரு நிமிடம் என்ன நினைப்பது..என்ன செய்வது..என்ன பேசுவது என்றே தெரியவில்லை..அப்படியே திகைத்து நின்று விட்டேன்...சிலையாக நின்ற என்னை பார்த்த சுமா அவளது முகத்தை மறைத்துக்கொண்டு என்னை பார்க்காதது போல வந்த வழியே செல்ல தொடங்கினாள்..அவளின் இந்த நிலையை கண்டு என் கண்களில் தானாக வழிந்த கண்ணீர் என்னை சுய நினைவுக்கு கொண்டு வர அவள் பின்னாடியே ஓடி சென்று அவள் கைகளை பற்றி என் முகம் பார்க்க செய்தேன்..
 
சிறு நொடி கூட என் முகம் பார்க்காமல் அவளால் இருக்க முடியாது..அப்படிப்பட்ட என் சுமா இன்று என் கண்களை பார்க்கவே கூச்சப்பட்டு துப்பட்டாவால் முகத்தை மறைத்த வண்ணம் நிற்கிறாள்...இத்தனை நாள் வேதனையை விட இந்த வேதனையே எனக்கு அதிகமாக இருந்தது...
 
காதல் என்ற பெயரில் பெண்களை தம் வசப்படுத்தும் கொடூரத்தனமான செயலுக்கு என் சுமாவும் பலியாகி விட்டாள் என அறிந்த நான் என்ன ஏது என்றே கேட்க விரும்பவில்லை...
அவள் இத்தனை நாள் என்னை காண வராதத்துக்கு காரணம் தன்னுடைய இந்த முகத்தை காட்ட வெட்கப்பட்டு தானே தவிர என் மீது இருந்த காதல் அவளுக்கு துளி கூட குறையவில்லை என்பதை என்னை இருக்க பற்றி கொண்ட அவள் கரங்கள் புரிய வைத்தன...
 
என் வார்த்தைகளால் நம்பிக்கை கொடுத்து அவளை மீண்டும் என்னுடையதாக்குவதை விட என்ன செய்தால் அவளுக்கு என்னுடைய அன்பும் நேசமும் இறுதி வரை இருக்கும் என அறிந்த நான் நடுத்தெரு என்று கூட பார்க்காமல் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டேன்....
என்னை விட அவளே என்னை இறுக்க பற்றி கொண்டாள்..இதை விட வேறு ஏதும் வார்த்தைகள் நம் காதலை விவரிக்க முடியுமா?
 
நீ ஒரு பெண்ணை அடைய ஆயிரம் வழிகள் இருக்கலாம்..ஆனால் அந்த பெண் உன்னை வந்து சேர இருப்பது ஒரே ஒரு வழியே ..அது உண்மையான அன்பு மட்டுமே... ❤ ❤
 
 
 
Written By
❤️அம்மு



கறுவாச்சி காவியம்

  என் ஊரு கல்லுப்பட்டி...என் பேரு அழகம்மாள்..எனக்கும் என் பேருக்கும் சம்மந்தமே இருக்காது...அதனாலேயே என்னை செல்லமா எல்லாரும் கறுவாச்சி என்று ...